Thursday 18 August 2016

"நீதி கதை" - இதுதான் வாழ்க்கையா?

அது ஒரு சின்ன கிராமம்.
சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான்.
அப்போது, “என்னை காப்பாற்று, காப்பாற்று“ என்று ஓர் அலறல் சத்தம் கேட்டது.

ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறியது.

"உன்னை விடுவித்தால் என்னை விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன்" என மறுத்தான் சிறுவன்.

ஆனால் முதலை, “நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று” என்று கண்ணீர் விட்டது.

முதலையின் பேச்சை நம்பி, சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பித்தான். அறுத்து முடிப்பதற்குள், சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது முதலை.

"பாவி முதலையே! இது நியாயமா?" என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க, “அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை.

சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றி கெட்டதனத்தை, ’இதுதான் உலகம்’ என்று சொல்வதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான். "இதுதான் உலகமா?" என்று.

அதற்கு பறவைகள், ”எத்தனையோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் நாங்கள் முட்டையிடுகிறோம். ஆனாலும், பாம்புகள் முட்டைகளை குடித்து விடுகின்றன. அதனால், இதுதான் உலகம்” என்று சொல்கின்றன.

அங்கு மேய்ந்து கொண்டு இருக்கும் கழுதைகளைப் பார்த்து கேட்கின்றான். ”நாங்கள் இளமையாக இருந்த காலத்தில் அதிகபடியான சுமைகளை சுமக்க செய்து, அடித்து, சக்கையாக வேலை வாங்குகிறார்கள். எங்களுக்கு வயதாகி, நடை தளர்ந்தவுடன், தீனி போட முடியாது என்று விரட்டிவிடுவதால், முதலை சொல்வது சரிதான்” என்கின்றன.

ஆடுகளை கேட்கிறான். ”எங்களுக்கு இரை போட்டு வளர்ப்பவர்களே, எங்களை இரையாக்கி கொள்வதால், முதலை சொல்வது சரிதான்” என ஆமோதிக்கின்றன.

கடைசியாக ஒரு முயலைப் பார்த்துக் கேட்கின்றான். “இதுவல்ல உலகம். முதலை பிதற்றுகிறது” என முயல் சொல்ல, முதலைக்கு கோபம் வந்துவிடுகிறது.

"சிறு முயல் உனக்கு என்ன தெரியும்?" என்று முதலை சொல்லவும், '’நீ பேசுவது சரியாக புரியவில்லை, தெளிவாக பேசு’' என்கிறது முயல்.

"காலை விட்டால் சிறுவன் ஓடிவிடுவான்" என்ற முதலையைப் பார்த்து, முயல் பெரிதாக சிரிக்கிறது.

"உன் வாலை வைத்து அவனை அடித்து விடமுடியாதா? ஒரே அடியில் அவனை வீழ்த்திவிடமுடியும் உன்னால்." என்றவுடன், கர்வத்துடன் காலை விட்டுவிட்டு, இதுதான் உலகம் என பேச துவங்கியது முதலை.

முயல் சிறுவனைப் பார்த்து "நிற்காதே! ஓடிவிடு." என்றது.

சிறுவன் ஓடிவிடுகிறான். வாலால் அடித்து விடலாம் என நினைத்த முதலைக்கு ஏமாற்றமாகப் போய்விடுகிறது.

வலையில் சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை பிடித்தது நினைவுக்கு வருகிறது.

கோபத்துடன் முயலைப் பார்க்க, ”புரிந்ததா? இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை” என்கிறது முயல்.

தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்துவர, அவர்கள் முதலையை கொன்றுவிடுகின்றனர்.

சிறுவனோடு வந்த வளர்ப்பு நாய், புத்திசாலி முயலை பாய்ந்து பிடிக்கிறது.

சிறுவன் காப்பாற்றுவதற்குள் முயலை நாய் கொன்றுவிடுகிறது.

உயிராக வளர்த்த நாய்தான் என்றாலும், உயிரைக் காப்பாற்றிய முயலை கொன்றுவிட்டதை அவனால் சகித்துக் கொள்ளமுடியவில்லை.

கல்லெடுத்து எறிந்து நாயை விரட்டிவிடுகிறான்.

உதவி செய்தவர்களுக்கு உபத்திரவம் ஏற்படுவதும், நேசித்தவர்களையே வெறுக்க நேரிடுவதும் அவனை குழப்பிவிடுகிறது.

இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா? என்ற கேள்விக்கு பதில் சொல்வார் யாருமில்லை!

முன்னுக்குப்பின் முரணனானதாகவும், எதிரும் புதிருமான நிகழ்வுகள்தான் வாழ்க்கை!

அடுத்த நொடிகளில் நடக்க இருப்பது, அதிர்ச்சிகளா? ஆச்சரியங்களா? என அறியமுடியாமல் இருப்பதுதான் வாழ்க்கையின் சுவராஸ்யம்.

வாழ்க்கையை புரிந்துகொள்ளமுடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை)எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை

பேராசைக்காரன்

ஒரு ஊருல பேராசைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் கடவுளிடம் நிறைய சொத்து வேண்டும் என அடிக்கடி வேண்டினான்.

ஒரு நாள் கடவுள் அவன் முன்பு தோன்றி ஒரு குதிரையை கொடுத்தார்.

"இந்த குதிரை ஓடும் தூரம் உள்ள இடங்கள் எல்லாம் உனக்கு சொந்தமாகும்." என்றார்.

"அப்பாடா!" என்றால் குதிரை ஓடும். பஞ்ச வாகன குதிரையே! நில்" என்றால் நிற்கும்." என நிபந்தனை விதித்தார். அவனும் சம்மதித்தான்.

குதிரைமீது ஏறி, "அப்பாடா!" என்றான் குதிரை ஓட ஆரம்பித்தது.

காலை முதல் மறுநாள் வரை குதிரையில் ஓடி எல்லா இடங்களையும் சொந்த மாக்கினான் சொத்தின்மீது உள்ள பேராசையில் குதிரையை நிறுத்தும் வார்த்தையை மறந்துவிட்டான் .

பசியும் மயக்கமும் வந்தது குதிரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்து. பிறகு ஒரு மலையின் மீது ஏற தொடங்கியது.

அவன் குதிரையை நிறுத்துவதற்காக பயத்தில் ஒவ்வொரு வார்த்தையாக சொல்லிக்கொண்டே வந்தான். கடைசியில் குதிரை மலையின் உச்சியை அடைந்தது .

அவன் கடைசியாக அந்தவார்த்தை ஞாபகத்திற்கு வர "பஞ்ச வாகன குதிரையே! நில்!" என்றான்.

குதிரையும் நின்றது.

சந்தோசம் தாங்க முடியாமல் "அப்பாடா!" என பெருமூச்சு விட்டான் .

குதிரை பாய்ந்ததே ஒரு பாய்ச்சல்......................!

என்னே கடவுளின் குசும்பு!

அந்த குதிரை போலதான் நமது மனம். ஓடினால் ஓடிக்கொண்டே இருக்கும்.

"கைக்கடிகாரம்”

படித்ததில் பிடித்த ஒரு குட்டிக்கதை:

"கைக்கடிகாரம்”

ஒரு நாள் ஒரு விவசாயி தன் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை மோட்டார் கொட்டகையில் தொலைத்து விட்டார். அது அவரது திருமணத்தின் போது மனைவி அவருக்கு ஆசையாக பரிசளித்த கைக்கடிகாரம். அவர் அந்த இடத்தை சுற்றி தேடி பார்த்துவிட்டார். அவருக்கு அந்த கைக்கடிகாரம் கிடைக்கவில்லை.


நிலத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அவர்களை அழைத்து, "என் கைகடிகாரம் தொலைந்துவிட்டது. அதை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு நல்ல பரிசு ஒன்று கொடுப்பேன்" என்றார்.

சிறுவர்கள் ஆர்வமுடன் மோட்டார் கொட்டகைக்குள் சென்று தேட ஆரம்பித்தனர்.

சிறிது நேரத்தில் அவர்கள் வெளியே வந்து, "எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டனர்.

ஒரு சிறுவன் மட்டும் மீண்டும் வந்து, "எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். நான் தேடி தருகிறேன்" என்றான்.

விவசாயியும், "சரி! நீ போய் தேடிப்பார்" என்றார்.

மோட்டார் கொட்டகைக்குள் சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கைகடிகாரத்துடன் வெளியே வந்தான்.

அதை பார்த்த விவசாயி ஆச்சரியத்துடன், "எப்படி உன்னால் மட்டும் கண்டுபிடிக்க முடிந்தது?" என்று கேட்டார்.

"நான் உள்ளே சென்று தரையில் அமைதியாக உட்கார்ந்து காதுகளை கூர்மையாக்கி கேட்டேன். எந்த திசையில் இருந்து டிக் டிக் சத்தம் வருகிறது என்று. பிறகு சுலபமாக கண்டுபிடித்து எடுத்து வந்தேன்" என்றான்.

நீதி: அமைதியான மனநிலையில் எந்த ஒரு வேலை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியும்.

Sunday 24 April 2016

புத்திசாலியா...? திறமைசாலியா....?

ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.

அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.

சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது. ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது.

இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது." என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது.

இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.

உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது.

குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறிக் கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.

தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, "இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.

இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.

நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள்.

"கடுமையாக உழைப்பதைவிட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்".

ஒரு நாயின் விலை

ஒருவர் டீக்கடையிலிருந்து வெளியே வரும் போது ஒரு வித்தியாசமான இறுதி ஊர்வலம் செல்வதை பார்த்தார்.

ஒரு சவப்பெட்டியை முதலில் எடுத்து செல்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து மற்றொரு சவப்பெட்டி செல்கிறது .

அதற்கு பின்னால் ஒரு மனிதன் கருப்பு நாயை பிடித்து கொண்டு நடந்து செல்கிறார்.

அவருக்கு பின்னால் ஒரே வரிசையாக 200 ஆண்கள் நடந்து செல்கிறார்கள் . இதை பார்த்த நம் மனிதருக்கு ஒரே ஆர்வம்...அடக்க முடியவில்லை .

அவர் கருப்பு நாயுடன் நடந்து கொண்டிருந்தவரிடம் சென்று, "என்னை மன்னிக்கவும் ...உங்களை தொந்தரவு  செய்வதற்கு ...ஆனால் இந்த மாதிரி ஒரு இறுதி ஊர்வலத்தை நான் என் வாழ்கையில் பார்த்தது இல்லை. எல்லோரும் ஒரே வரிசையில் உங்கள் பின்னால் வருகிறார்கள்.,...இது யாருடைய இறுதி ஊர்வலம்?" என்று கேட்டார்.

"முதல் சவப்பெட்டி என் மனைவி உடையது."

"என்ன ஆயிற்று உங்கள் மனைவிக்கு ?"

"என்னுடைய நாய் அவளை கடித்து கொன்று விட்டது"

"இரண்டாவது சவப்பெட்டி ?"

"என்னுடைய மாமியாருடையது !! அவர்கள் என் மனைவியை காப்பாற்ற முயன்ற போது அவர்களையும் கொன்று விட்டது"

ஒரு நிமிட மௌனத்திற்கு பிறகு முதல் மனிதர் அவரிடம் கேட்டார் "இந்த நாயை எனக்கு சிறிது நாட்கள் தர முடியுமா?"

அதற்கு அவர் சொன்ன பதில் .......  "பின்னால் வரும் வரிசையில் போய் நில்லுங்கள் !!!!!!!!!"

இதுதான்டா வியாபாரம்

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார்.

"ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!'' என்று கூவி, பழங்களை விற்க முயன்றார்.

எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான்.

''ஆறு பழங்கள் பத்து ரூபாய்!'' என்று கூவினான்.

அவனுக்கு நல்ல விற்பனை!

மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், ''ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!'' என்று விற்க முயன்றார்.

பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார்.

அடுத்து, ''ஆறு பழங்கள் பத்து ரூபாய்'' என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.

முதியவரை அருகில் அழைத்தவர், "அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!" என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, "போய்யா..போ.. அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது. அதனால் நான், 'ஐந்து பழம் பத்து ரூபாய்'னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, 'ஆறு பழம் பத்து ரூபாய்'னு அவன் வந்து சொன்னதும்... 'அடடே லாபமா இருக்கே'னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!'' என்றார் முதியவர்.

பாவம்

நான் ரசித்த கதை.
காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி.

அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார்.

முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.

ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார்.

மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.

மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார்.

முக்காலமும் உணர்ந்த அவர், '‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா? அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!'’ என்று கூறி விட்டு போய்விட்டார்.

மன்னன் நடுங்கி விட்டான். தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான்.

தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான்.

அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான். அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பிவைத்தான். இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.

அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர்.

இப்படியாக பல விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.

ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள்.

அந்த கணவன், ‘'நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?'’ எனக் கேட்டான்.

"அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’' என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.

அதற்கு அவளது கணவன், '‘ஓ! தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?’' என்றான்.

அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.

பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத்தொடங்கினாள். ‘'சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரிய வரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான். ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள். மேலும் அடுத்தப் பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள்.

அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன்.

தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும். உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக்கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.

நாம் செய்த பாவத்தை சுமக்கவே, நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன!